ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ரமலான் சந்தைக்கு அதிகப் பகுதிகளை அடையாளம் காண்பீர்- ஊராட்சி மன்றங்களுக்கு கோரிக்கை

ஷா ஆலம். பிப் 18- நடப்பிலுள்ள ரமலான் சந்தைகள் தவிர்த்து கூடுதல் சந்தைகளை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் காணும்படி ஊராட்சி மன்றங்களுக்கு சிலாங்கூர் அரசு பரிந்துரைத்துள்ளது.

கூடல் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்வதற்காக கூடுதல் ரமலான் சந்தைகள் தேவைப்படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹானை மேற்கோள் காட்டி சினார் ஹரியான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது தவிர, சுகாதார அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள புதிய சீரான நிர்வாக நடைமுறைகளுக்கேற்பவும் (எஸ்.ஒ.பி.) இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

பரபரப்பான வேளைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக ரலமான் சந்தைகளில் நுழையும் மற்றும் வெளியேறும் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கண்காணிக்கப்படும் அதேவேளையில் அந்நடவடிக்கை ஒருங்கிணைக்கப்படவும் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாடு பொருளாதார மீட்சி நிலையில் இருந்து வரும் இவ்வேளையில் சிறு வணிகர்களின் நடவடிக்கைளை கட்டுப்படுத்தக் கூடாது என்பதற்காக மாநில அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஊராட்சி மன்றங்களுக்கான நிலைக்குழு கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து டத்தோ பண்டார்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்றார் அவர்.

கடந்தாண்டில் 11,700 ரமலான் சந்தைகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறிய இங், எனினும் இவ்வாண்டில் உருமாற்றம் கண்ட ஒமிக்ரோன் கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள ஆகக்கடைசி நிலவரங்களை கருத்தில் கொண்டு அந்த எண்ணிக்கை தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :