ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

செந்தோசா தொகுதியில் தன்னார்வலர் குழு உருவாக்கம்- டாக்டர் குணராஜ் தகவல்

ஷா ஆலம், பிப் 18- பிரச்னைகளை எதிர்நோக்கும் மக்களுக்கு உதவுவதற்காக செந்தோசா தொகுதி சொந்தமாக தன்னார்வலர் குழுவை உருவாக்கவுள்ளது.

“ஹிட்மாட் 100“ எனும் இந்த தன்னார்வலர் குழு அடுத்த வாரம் அமைக்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

இந்த தன்னார்வலர் குழு தொகுதியில் பிரச்னையை எதிர்நோக்குவோருக்கு மட்டுமின்றி நாடு முழுவதும் சென்று உதவிக்கரம் நீட்டும் என்று அவர் தெரிவித்தார்.

இம்மாத தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட “ஹிட்மாட் உந்தோக் மலேசியா“ (ஹிட்மாட்) எனும் மலேசியாவுக்கு உதவுவோம் அணியின் உருவாக்கத்தின் தொடர்ச்சியாக இந்த தன்னார்வலர் குழு அமைக்கப்படுகிறது. சமுதாயப் பணியில் நமது இளம் தலைமுறையினர் தீவிர பங்காற்ற வேண்டும் எனும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.

தொடக்க கட்டமாக 100 உறுப்பினர்களை இலக்காகக் கொண்ட இத்திட்டம் அடுத்த வாரம் சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும். படிப்படியாக இக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று டாக்டர் குணராஜ் மேலும் தெரிவித்தார்.

தேசிய நிலையிலான “ஹிட்மாட்“ அமைப்பை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இம்மாதம் 6 ஆம் தேதி தொடக்கி வைத்தார். பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவி புரிவதற்காக இந்த திட்டம்  ஆரம்பிக்கப்பட்டது.

செர்வ் எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பின் உருவாக்கத்தின் தொடர்ச்சியாக இந்த ஹிட்மாட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிரமத்தில் உள்ள மக்களுக்கு உதவுவதையும் உறுப்பினர்கள் மத்தியில் மனிதாபிமான உணர்வை ஏற்படுத்துவதையும் இத்திட்டம் இலக்காக கொண்டுள்ளது.


Pengarang :