ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

வங்காளதேச கட்டுமானத் தொழிலாளி கடத்தல்- ஏழு ஆடவர்கள் கைது

ஷா ஆலம், பிப் 20-  வங்காளதேச கட்டுமானத் தொழிலாளி கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஏழு  உள்ளூர் ஆடவர்களை கிள்ளான் மாவட்ட போலீசார் கிள்ளான் மற்றும் ஷா ஆலம் வட்டாத்தில் கைது செய்துள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரின் சகோதரர்  நேற்று பின்னிரவு 1.00 மணியளவில் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அதே தினம் விடியற்காலை 1.30 மணி முதல் 4.30 மணி வரை அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் 20 முதல் 25 வயது வரையிலான அனைத்து சந்தேகப் பேர்வழிகளையும்  கைது செய்ததாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ச்சா ஹூங் பூங் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை இரவு 8.57 மணியளவில் தன் சகோதரரின் தொலைபேசி வழி தன்னை தொடர்பு கொண்ட அனாமதேய ஆடவன், ” உன் சகோதரர் எங்களுடன் இருக்கிறார். அவரை விடுவிக்க வேண்டுமானால் 50,000 வெள்ளி கொடுக்க வேண்டும். தவறினால் நாங்கள் உன் வீட்டிற்கே வருவோம் என மிரட்டினான் என கடத்தப்பட்டவரின் சகோதரர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் தன் கடத்தப்பட்ட தன் சகோரருடன் வீட்டிற்கு வந்த அந்த ஆடவர்கள்  அவரையும் வீட்டிலிருந்த மேலும் மூவரையும் தாக்கியதோடு மறுபடியும் தன் சகோதரரை  வெளியில் கொண்டுச் சென்றார் என்று போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஏசிபி ச்சா தெரிவித்தார்.

அதே தினம் பின்னிரவு 1.30 மணியளவில் ஷா ஆலம்  வட்டாரத்தில் சாலையோரத்தில் அந்த கடத்தப்பட்ட ஆடவர் மீட்கப்பட்டதாக கூறிய அவர்,  அவ்வாடவர் சிகிச்சைக்காக கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொன்னார்.

கைதான அனைவரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :