HEALTHMEDIA STATEMENTNATIONAL

மருத்துவமனைகளில் ஐ.சி.யு. பிரிவில் கட்டில்கள் பயன்பாடு 50 விழுக்காட்டிற்கும் கீழ் உள்ளது

கோலாலம்பூர், பிப் 21– இம்மாதம் 20 ஆம் தேதி வரை புத்ரா ஜெயா, லாபுவான் மற்றும் இதர 11 மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யு.) கட்டில்களின் பயன்பாடு 50 விழுக்காட்டிற்கும் கீழ் உள்ளது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பகாங், திரங்கானு, கிளந்தான், சபா மற்றும் சரவாக் ஆகியவையே அந்த 11 மாநிலங்களாகும் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

புத்ரா ஜெயாவில் உள்ள ஆறு ஐ.சி.யு. கட்டில்களில் ஒன்று மட்டுமே பயன்படுத்தப்படும் வேளையில் லாபுவானில் உள்ள ஏழு கட்டில்களில் எதுவும் பயன்பாட்டில் இல்லை என்று அவர் தெரிவித்தார்

இதர மாநிலங்களிலும் ஐ.சி.யு. வார்டுகளில் கட்டில்களின் பயன்பாடு குறைவாகவே உள்ளதாகக் கூறிய அவர், நெகிரி செம்பிலானில் 8 விழுக்காடும் சரவாவில் 13 விழுக்காடும் பகாங்கில் 14 விழுக்காடும் கெடாவில் 15 விழுக்காடும் புத்ரா ஜெயாவில் 17 விழுக்காடும் திரங்கானுவில் 20 விழுக்காடும் பயன்பாட்டில் உள்ளன என்றார்.

நேற்று நாடு முழுவதும் 26,832 பேர் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட வேளையில் அவர்களில் 1,438 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றார் அவர்.

பொதுவாக, கோவிட்-19 மற்றும் கோவிட்-19 அல்லாத நோயாளிகளைக் கையாளும் ஆற்றல் பொது மருத்துவமனைகள் கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :