HEALTHMEDIA STATEMENTNATIONAL

கோப்பெங் மெட்ரிகுலேஷன் கல்லூரியில் கோவிட்-19  பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது

பாகான் செராய், பிப் 21- இம்மாத தொடக்கம் முதல் கோப்பெங், மெட்ரிகுலேஷன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதாரத் துறை துணையமைச்சர் டத்தோ  டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி தொடங்கி அந்த கல்லூரியின் ஐந்து கட்டிடத் தொகுதிகளிலும் 365 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் சொன்னார்.

அந்த கல்விக்கூடத்தில் நேற்று புதிதாக கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகவில்லை எனக் கூறிய அவர், சீனப்புத்தாண்டு முடிந்து கல்லூரி திரும்பிய மாணவர்கள் மூலம் இந்நோய்த் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றார்.

எனினும், இவ்விவகாரத்தை கோப்பெங் மாவட்ட சுகாதார இலாகா சிறப்பான முறையில் கையாண்டுள்ளது. நோய்த் தொற்று கண்டவர்கள் தொடக்கத்திலேயே ஊழியர்கள் குடியிருப்பு பகுதியிலும் விருந்தினர் அறையிலும் தனிமைப்படுத்தப்பட்டனர். என்றார் அவர்.

இங்குள்ள குனோங் செமாங்கோல் ஸ்ரீ செலின்சிங் மண்டபத்தில் பிக்கிட்ஸ் எனப்படும் சிறார்களுக்கான தடுப்பூசித் திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

நோய்த் தொற்றுப் பரவல் அதிகரிப்பதை தடுப்பதற்காக மாணவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படாததோடு பெற்றோர்கள் உள்பட யாரும் கல்லூரியில் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்றார் அவர்.


Pengarang :