ECONOMYHEALTHNATIONAL

“பிக்கிட்ஸ்“ தடுப்பூசித் திட்டத்திற்கு 10 லட்சம் சிறார்கள் பதிவு- அமைச்சர் கைரி தகவல்

கோலாலம்பூர், பிப் 21– பிக்கிட்ஸ் எனப்படும் சிறார்களுக்கான தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ்த் தடுப்பூசி பெறுவதற்குப் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பதிவு செய்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 28 விழுக்காட்டை இந்த எண்ணிக்கை பிரதிபலிக்கிறது என்று அவர் சொன்னார்.

சிறார்களுக்கான தடுப்பூசி இயக்கம் தொடக்கிய மூன்று வாரக் காலத்தில் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. பெற்றோர்கள் “பொறுத்திருந்து பார்ப்போம்“ என்ற மனப்போக்கைக் கைவிட்டுத் தங்கள் பிள்ளைகளுக்கு உடனடியாகக் கோவிட்-19 தடுப்பூசி பெறுவதற்குப் பதிவு செய்வர் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பொறுத்திருந்து பார்க்கும் மனப்போக்கைப் பெற்றோர்கள் இனியும் கொண்டிருக்க மாட்டார்கள் என நம்புகிறோம். பிக்கிட்ஸ் திட்டத்தின் கீழ் உங்கள் பிள்ளைகளை உடனடியாகப் பதிந்து கொள்ளுங்கள் என அவர் கேட்டுக் கொண்டார்.

பிக்கிட்ஸ்  பதிவு தொடர்பான விளக்கப்படத்தைக் கைரி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். தடுப்பூசிக்கு அதிகமானோர் பதிந்து கொண்ட மாநிலங்களில் கோலாலம்பூர் முதலிடத்திலும் பினாங்கு மற்றும் புத்ரா ஜெயா அதற்கு அடுத்த நிலையிலும் உள்ளதை அந்த விளக்கப்படம் காட்டியது.


Pengarang :