ECONOMYNATIONAL

ரமலான் சந்தைக்குக் கூடுதல் இடங்களை அடையாளம் காண்பீர்-ஊராட்சி மன்றங்களுக்குக் கோரிக்கை

ஷா ஆலம், பிப் 22–  கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக ரமலான் சந்தைகளுக்குக் கூடுதல் இடங்களை அடையாளம் காணும் அதேவேளையில் ஒரே இடத்தின் மீது கவனம் செலுத்த வேண்டாம் என்று ஊராட்சி மன்றங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

கண்காணிப்பு பணிகளை எளிதாக மேற்கொள்ளவும் வணிகர்களும் வாடிக்கையாளர்களும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) முறையாகக் கடைபிடிப்பதை உறுதி செய்யவும் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கச் சந்தைகளை அமைப்பதற்குக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை   அடையாளம் காண்பது அவசியம்  என்று அவர் சொன்னார்.

ரமலான் சந்தை தொடர்பான தரவுகள் மற்றும் பொருத்தமான இடங்கள் குறித்த தகவல்களை ஊராட்சி மன்றங்கள் கொண்டிருப்பதால் இவ்விவகாரத்தில் அத்துறைகளின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது. கடந்தாண்டில் அமைக்கப்பட்ட 11,773 ரமலான் சந்தைகளைவிட இம்முறை  சற்றுக் கூடுதலாக அமைக்கப்படும் என்று அவர் சொன்னார்.

வணிகர்களுக்கு உதவுவது நமது  முக்கிய நோக்கமாகும். அதே சமயத்தில் எஸ்.ஒ.பி. விதிகளையும் கடைபிடிக்க விரும்புகிறோம். ரமலான் சந்தைக்கான விண்ணப்பங்கள் இன்னும் வரவேற்கப்படுவதால் அதன் எண்ணிக்கையை இன்னும் உறுதிப்படுத்த இயலவில்லை என்றார் அவர்.

ரமலான் சந்தைகள் உள்பட வர்த்தக நடவடிக்கைகளுக்கு இவ்வாண்டு தடைவிதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் ரமலான் சந்தைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் தக்கத் தருணத்தில் அது வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


Pengarang :