ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோழி தீவன விலை உயர்வுக்குப் பிரேசிலிய சோளப் பற்றாக்குறையே காரணம்- துணையமைச்சர் கூறுகிறார்

சபா பெர்ணம், பிப் 23– கோழி விலை உயர்வு கண்டதற்குக் கால் நடைத் தீவனங்கள் குறிப்பாகப் பிரேசிலிய சோளத்திற்கு ஏற்பட்ட பற்றாக்குறையே காரணம் என்று விவசாய மற்றும் உணவுத் தொழில்துறை துணையமைச்சர் 11 டத்தோ டாக்டர் நிக் முகமது ஜவாவி சாலே கூறினார்.

கோழி தீவன விலை உயர்வுக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் முக்கியக் காரணமாக விளங்குவதால் அந்நோய் பரவல் தணிந்தவுடன் கோழியின் விலை குறையும் எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

கோழி தீவனத்தின் விலையை நாங்கள் உயர்த்தவில்லை. அது பிரேசில் நாட்டில் வெளியிடப்படும் அனைத்துலக விலையாகும். தற்போது அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

உலகில் தேவை அதிகரிக்கும் போது அதன் விலையும் உயரத் தொடங்கும். நமது நாட்டில் மட்டுமின்றி உலக முழுவதும் கோழி மற்றும் கோழி தீவனத்தின் விலை உயர்வு கண்டுள்ளது. ஜோர்டான் நாட்டில் கோழியின் விலை கிலோ 18.00 வெள்ளியாகும் என்றார் அவர்.

மலேசியாவுடன் ஒப்பிடுகையில் மற்ற நாடுகளில் கோழியின் விலை மிக அதிகமாக உள்ளதாக கூறிய அவர், நம்மைப் போல் அவர்களால் உதவித் தொகை கொடுக்க முடியாததே இதற்கு காரணமாகும் என்றார்.

சிகிஞ்சான், சுங்கை பூரோங்கில் பெரிய அளவிலான விவேக நெல் வயல் திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

மக்களுக்கு உதவித் தொகை வழங்கும் நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது. கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் அண்மைய வெள்ளத்திற்குப் பின்னரும் இத்தகைய திட்டங்களை அமல்படுத்தும் ஆற்றலை அரசாங்கம் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :