ECONOMYMEDIA STATEMENTNATIONAL

 இடைநிலைப்பள்ளிகளை வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்தும் திட்டம்- அமைச்சு- எஸ்.பி.ஆர். இன்று சந்திப்பு

குளுவாங், பிப் 23- வரும் மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலின் போது இடைநிலைப்பள்ளிகளை வாக்குச் சாவடிகளாகப் பயன்படுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கல்வியமைச்சு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு (எஸ்.பி.ஆர்.) இடையே இன்று நடைபெறும் சந்திப்புக்குப் பின்னர் வெளியிடப்படும்.

இவ்விரு தரப்பினருக்குமிடையிலான சந்திப்பு இன்று புத்ரா ஜெயாவில் நடைபெறும் என்று துணை கல்வியமைச்சர் 11 டத்தோ முகமது அலிமின் கூறினார்.

வாக்குச் சாவடிகளாக இடைநிலைப்பள்ளிகளைப் பயன்படுத்தும் முடிவில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருந்தால் கல்வியமைச்சு அம்முடிவுக்கு அடிபணியும். காரணம், 1958 ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தில் இந்த அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

ஜோகூர் மாநிலத் தேர்தல் நடைபெறும் சமயத்தில் வகுப்பறைகள் உள்ளிட்ட பள்ளிக் கட்டிடங்கள் எஸ்.பி.எம். தேர்வுக்காகப் பயன்படுத்தப்படும் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். எனினும், நிலைமை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வோம் என்றார் அவர்.

எஸ்.பி.எம். தேர்வை எழுதும் மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் இருப்பதை உறுதி செய்யும்படி தேர்தல் ஆணையம் உள்படத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தரப்பினரைக் கல்வியமைச்சு கேட்டுக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் 2 முதல் 29 வரை நடைபெறும் எஸ்.பி.எம். தேர்வு எந்த இடையூறுமின்றிச் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும்படி ஜோகூர் மாநிலத் தேர்தலில் வாக்களிப்பு பணியில் ஈடுபடும் தரப்பினரையும் தமது தரப்பு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

எஸ்.பி.எம். மாணவர்கள் மத்தியில் கோவிட்.19 நோய்த் தொற்று பரவாமலிருப்பதை உறுதி செய்ய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஒ.பி.) கடுமையாக்கப்படும் என்று கல்வியமைச்சு எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.


Pengarang :