ECONOMYMEDIA STATEMENT

கே.டி.எம்.பி. குத்தகை- லஞ்சக் குற்றச்சாட்டில் நிறுவன இயக்குநருக்கு 7 நாள் தடுப்புக் காவல்

கோலாலம்பூர், பிப் 23-  கெராத்தாப்பி தானா மிலாயு (கே.டி.எம்.பி.) எனப்படும் மலாயன் ரயில்வே நிறுவனம் சம்பந்தப்பட்ட 20 லட்சம் வெள்ளி ஊழல் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக நிறுவன இயக்குநர் ஒருவரை இன்று தொடங்கி 7 நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) இன்று காலை செய்து கொண்ட மனுவை ஏற்றுக் கொண்ட இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த 63 வயது நபரை விசாரணைக்காகத் தடுத்து வைக்க அனுமதி வழங்கியது.

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக நேற்று மாலை 3.10 மணியளவில் கோலாலம்பூரிலுள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகம் வந்தபோது அந்த நிறுவன இயக்குநர் தடுத்து வைக்கப்பட்டதாக எம்.ஏ.சி.சி. வட்டாரம் தெரிவித்தது.

தாய்லாந்தின் சொங்க்லா பகுதியில் தண்டவாளம் மற்றும் துறைமுக மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான குத்தகையை தனது நிறுவனம் பெறுவதற்காக கே.டி.எம்.பி நிறுவன அதிகாரிகளுக்கு அவ்வாடவர் லஞ்சம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, இந்தக் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்திய கெடா மாநில எம்.ஏ.சி.சி இயக்குநர் டத்தோ ஷஹாரும் நிஸாம் அப்துல் மானாப், 2009 ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 17(ஏ) பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாகச் சொன்னார்.


Pengarang :