ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெ. 60,000 மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்- இரு ஆடவர்கள் கைது

பெட்டாலிங் ஜெயா, பிப் 24- கோலாலம்பூர், தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசார், போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட இரு ஆடவர்களை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 60,000 வெள்ளி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அன்றைய தினம் மாலை 6.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது நடவடிக்கையில் டாமன்சாராவிலுள்ள பேரங்காடி ஒன்றின் கார் நிறுத்தத்தில் புரோட்டோன் சத்திரியா காரில் இருந்த 34 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.

அக்காரில்  மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 17 பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த 16.21 கிலோ கஞ்சாவை நாங்கள் கைப்பற்றினோம். இந்த போதைப் பொருளின் மதிப்பு 53,493 வெள்ளியாகும் என்று இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

கைதான ஆடவர் கொடுத்த தகவலின் பேரில் அரை மணி நேரத்திற்குப் பின்னர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள வீடொன்றில் சோதனை நடத்தி 44 வயது ஆடவரை கைது செய்தோம் என்றார் அவர்.

அந்த வீட்டின் அறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2.92 கிலோ எடைகொண்ட மூன்று கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு 9,636 வெள்ளியாகும். இச்சோதனை நடவடிக்கையின் போது வோக்ஸ்வேகன் கோல்ப் ரக கார் மற்றும யமஹா மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் மேலும் சொன்னார்.

அவ்விரு ஆடவர்கள் மீதும் ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றப்பதிவுகள் உள்ளதாக கூறிய அவர், இச்சம்பவம் தொடர்பில் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39 பி பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Pengarang :