ECONOMYHEALTHNATIONALPBT

தாமான் ஸ்ரீ மூடாவில் இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணி நீட்டிப்பு

ஷா ஆலம், பிப் 25- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாத இறுதியில் முற்றுப் பெற வேண்டிய இப்பணி பல்வேறு தடைகள் மற்றும் இடையூறுகள் காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

இந்த இரண்டாம் கட்டத் துப்புரவுப் பணியில் கால்வாய்கள், நீரோடைகள் மற்றும் வழித்தடங்களை சுத்தம் செய்வது மட்டுமே பிரதான நோக்கமாக இருந்தது. எனினும் தொடர்ந்து குவிந்து வரும் வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகளை அகற்ற வேண்டிய நிர்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

மரத்தளவாடங்கள் போன்ற குப்பைகள் முதலாம் கட்டத் துப்புரவுப் பணியின் போதே அகற்றப்பட்டிருக்க வேண்டும். எனினும் பொது மக்கள் அத்தகைய திடக்கழிவுகளை தொடர்ந்து வீசி வரும் காரணத்தால் எங்கள் இலக்கை மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டுப் புனரமைப்புப் பணிகளை கால்வாய்கள் வரை நீட்டித்துள்ளனர். இதன் காரணமாக சீரான நீரோட்டத்தை உறுதி செய்யும் பணி தாமதமடைகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வீட்டிலுள்ள திடக்கழிவுகளை அகற்ற விரும்பும் பொது மக்கள் ரோ ரோ எனப்படும் லோரிகள் மூலம் அகற்றக்கூடிய குப்பைத் தோம்புகளை வாடகைக்கு எடுக்கும்படி பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

அப்பகுதியில் இவ்வாரம் மீண்டும் துப்புரவு இயக்கத்தை மேற்கொள்ளவிருக்கிறோம். அப்போது அப்போது ஏற்பாடு செய்யப்படும் ரோ ரோ தோம்புகளில் பொதுமக்கள் குப்பைகளை வீசலாம் என்று அவர் கூறினார்.


Pengarang :