ECONOMYSELANGORTOURISM

ஷா ஆலம் நவீன கலைக்கூடம் அடுத்தாண்டு பொது மக்களுக்குத் திறக்கப்படும்

ஷா ஆலம், பிப் 27-  ஷா ஆலம் மாடர்ன் ஆர்ட்  கேலரி(சாமா)  எனப்படும் நவீன கலைப் படைப்புக் கூடம் அடுத்த ஆண்டு பொதுமக்களுக்குத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கலைக்கூடத்தின் உருவாக்கத்திற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதோடு அந்நோக்கத்திற்காகக் கட்டிடம் ஒன்றை வாங்கும்  பணியில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகக் கலாசாரம் மற்றும் பாரம்பரியத் துறைக்கான ஆட்சிக்குழு  உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா கூறினார் .

இறைவன் அருளால் இப்பணிகள் யாவும் இந்த ஆண்டு முடிவடைந்து கலைக்கூடத்திற்கு ஏற்ற வடிவில் கட்டிடத்தைப் புதுப்பிப்போம் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்கு  நடைபெற்ற சிலாங்கூர் பாரம்பரியக் கிராமத் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்திற்கான சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர்ச் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கலைக்கூடம் வரும் 2023 ஆம் ஆண்டில்  பொதுமக்களுக்குத் திறக்கப்படும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நவீன கலைக்கூடத்தை மாநில அரசு அமைக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி 2022ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது கூறியிருந்தார்.

இந்தக் கலைக்கூடத்தை அமைப்பதற்காக ஷா ஆலமில் உள்ள பேங்க் நெகாராவுக்குச் சொந்தமான கட்டிடத்தை 3 கோடியே 34 லட்சம் வெள்ளிக்கு வாங்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :