ALAM SEKITAR & CUACAECONOMY

மாநில ஆட்சிக்குழுவில் பருவநிலை மாற்றத்திற்கான புதிய துறை- இங் ஸீ ஹான் பொறுப்பேற்பார்

ஷா ஆலம், பிப் 28-  காஜாங் சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் தலைமையில் பருவநிலை மாற்றத்திற்கான புதிய துறையை உருவாக்க  மாநில ஆட்சிக்குழு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

இந்தப் புதிய துறையின் உருவாக்கத்தின் வழி ஆட்சிக்குழுவில் தமது துறை இனிச்  சுற்றுலா, பருவநிலை மாற்றம், பசுமைத் தொழில் நுட்பம் மற்றும் பூர்வக்குடியினர்  விவகாரத்துறை என அழைக்கப்படும் என்று இங் ஸீ ஹான்  தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் குறிப்பாக வெள்ளம் தொடர்பான விவகாரங்களை விவாதித்துத் தீர்வு காண்பதற்கு  இந்தப் புதிய துறை தேவைப்படுவதாகச்  சம்பந்தப்பட்ட தரப்பினர் கூறியதைத் தொடர்ந்து  அப்பெயர் தமது துறையுடன் இணைக்கப்பட்டதாகச் சிலாங்கூர் ஜெர்னல் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான விஷயங்களில் அனுபவம் வாய்ந்த அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் கொண்ட குழு ஒன்றைத் தாம் அமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றம் ஏற்படுவதற்கான காரணங்களை அடையாளம் காண்பது மற்றும் சிலாங்கூரில் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வியூகங்களை வரையும் நோக்கில் இக்குழு அமைக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இக்குழுவில் இடம்பெறவுள்ள சிலரை நாங்கள் அடையாளம் கண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். அவர்கள் இவ்விவகாரத்தில் மாநில அரசுடன் ஒத்துழைக்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர் என்று அவர் மேலும் சொன்னார்.

தாம் ஏற்கனவே சுற்றுச்சூழல் துறைக்குப் பொறுப்பேற்றுள்ளதால் இந்தப் புதிய துறை தமக்குப் பெரிதாக எந்த மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.

 


Pengarang :