ECONOMYPBT

பி.எஸ்.பி. திட்டத்தின் கீழ் 114,081 குடும்பங்களுக்கு  வெள்ள உதவி நிதி வழங்கப்பட்டது

ஷா ஆலம், மார்ச் 1- கடந்தாண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 114,081 குடும்பத்தினர் மாநில அரசின் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் (பி.எஸ்.பி.) திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.

வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட 130,000 வெள்ளியுடன் சேர்த்து மொத்தம் 11 கோடியே 42 லட்சத்து 11 ஆயிரம் வெள்ளி இத்திட்டத்திற்குச் செலவிடப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கிள்ளான் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 60,427 குடும்பங்களுக்கு 6 கோடியே 4 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதற்கு அடுத்துப் பெட்டாலிங் மாவட்டத்தில் 20,948 பேருக்கு 2 கோடியே 9 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியும் கோல லங்காட்டில் 10,904 குடும்பங்களுக்கு 1 கோடியே 9 லட்சத்து 10 ஆயிரம் வெள்ளியும் வழங்கப்பட்டன என்றார் அவர்.

வெள்ளம் காரணமாகக் கிள்ளான் மாவட்டத்தில் அறுவரும் சிப்பாங்கில் மூவரும் உலு லங்காட்டில் இருவரும் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை மாநில அரசு கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி அறிவித்தது.

இத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10,000 வெள்ளியும் வழங்கப்பட்டது.


Pengarang :