ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மரணத் தண்டனைக்கு எதிராக நாகேந்திரன் முறையீடு- தீர்ப்பை ஒத்தி வைத்தது சிங்கப்பூர் நீதிமன்றம்

சிங்கப்பூர், மார்ச் 1- கடந்த 2009 ஆம் ஆண்டில் 42.72 கிராம் ஹெரோயின் போதைப் பொருளைச் சிங்கப்பூருக்குக் கடத்திய குற்றத்தின் பேரில் தனக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை எதிர்த்து மலேசியரான நாகேந்திரன் கே. தர்மலிங்கம் செய்து கொண்ட முறையீடு மீதான தீர்ப்பை இங்குள்ள மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று ஒத்தி வைத்தது.

இந்த வழக்கைத் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், அண்ட்ரூ பாங், ஜூடித் பிரகாஷ், பெலிண்டா ஆங், சோ ஹிக் தின் ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு விசாரித்தது.

இந்த வழக்கின் தீர்ப்பை நாங்கள் ஒத்தி வைக்கிறோம். விரைவில் மீண்டும் சந்திக்கிறோம் எனத் தலைமை நீதிபதி மேனன் தெரிவித்தார்.

இந்த வழக்கில் நாகேந்திரன் சார்பில் வழக்கறிஞர் எம்.ரவிக்கு பதிலாக வைலட் நோட்டோ ஆஜரானார்.

தனக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனைக்கு எதிராக நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கையை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் மறுத்தது உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் நாகேந்திரன் மேல் முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு 42.72 கிராம் ஹெரோயின் போதைப் பொருளைக் கடத்தியதற்காக நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். அவர் அறிவுசார் ரீதியாக ஊனமுற்றவர் என்று அவரின் வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி நாகேந்திரனுக்கு இக்குடியரசின் உயர் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்தது.

அதிபரின் மன்னிப்பை பெறும் மனு கடந்த 2020 ஜூன் 1 ஆம் தேதி நிராகரிக்கப்பட்ட நிலையில் தண்டனைக்கு எதிரான நாகேந்திரனின் முறையீடு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

நாகேந்திரனுக்கு கருணைக் காட்டக் கோரி சிங்கை பிரதமர் லீ சியேன் லுங்கிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்தாண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்த வழக்கு அனைத்துலக நிலையில் கவனத்தைப் பெற்றது.


Pengarang :