ECONOMYPBTSELANGOR

கோலச் சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உணவுக் கூடை, மின்சாரச் சாதனங்களைப் பெற்றனர்

கோலச் சிலாங்கூர், மார்ச் 2– கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கம்போங் புக்கிட் ஹீஜாவ் மற்றும் கம்போங் பாரிட் மஹாங்கைச் சேர்ந்த 100 பேர் யாயாசான் ஃபூட் பேங்க் மலேசியா அறவாரியத்திடமிருந்து உணவுப் பொருள்களைப் பெற்றனர்.

ஷியோமி மலேசியா நிறுவனம் வழங்கிய 500,000 வெள்ளி நிதியில் ஒரு பகுதியாக இந்த உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதாக அந்த அறவாரியத்தின் இயக்குநர் வாரியத் தலைவர் மேதகு தெங்கு டத்தின் படுகா செத்திய ஜத்தாஷா சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா கூறினார்.

இது தவிரச் சோப்பு உள்ளிட்ட குளியலறைப் பொருள்களையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினோம். இந்த உதவி அவர்களின் சுமையை ஓரளவு குறைக்க உதவும் என்று நம்புகிறோம் என அவர் தெரிவித்தார்.

கம்போங் புக்கிட் ஹீஜாவ் அல் ஃபாலா பள்ளிவாசலில் இன்று நடைபெற்ற வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப் பொருள் வழங்கும் நிகழ்வில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் புதல்வியான அவர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து உரையாடியதோடு சலவை இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி போன்ற மின்சாதனங்களையும் அவர்களிடம் ஒப்படைத்தார்
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 17 முதல் 19 ஆம் தேதி வரை பெய்த அடை மழையில் சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் 10 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.


Pengarang :