ECONOMYNATIONAL

தேர்தல் எஸ்.ஒ.பி. விதிகள் எதிர்க்கட்சிகளுக்கும் நியாயமானதாக இருப்பதை உறுதி செய்வீர்- அன்வார் கோரிக்கை

ஷா ஆலம், மார்ச் 2– ஜோகூர் மாநிலத் தேர்தலின் போது அமல்படுத்தப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் (எஸ்.ஒ.பி.) எதிர்க்கட்சிகளுக்கும் நியாயமானதாக இருப்பதை உறுதி செய்யும்படி மத்திய அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் அளவுக்குத் தேர்தல் ஆணையம் ஒருபோதும் ஆளும் வர்க்கத்தின் கருவியாகச் செயல்படக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

தேர்தலில் பிரசாரம் செய்யக்கூடாது, பிரசார இடம் மண்டபமாக இருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட தரப்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் இந்த நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

இந்த வரையறைகள் நியாயமற்றவை. நியாயமாக செயல்படுவதை உறுதி செய்ய எஸ்.ஒ.பி. விஷயத்தில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம்தான் ஜோகூரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முடிவெடுத்தது. ஆகவே, சிறந்த எஸ்.ஒ.பி. விதிகளை அது அமல்படுத்த வேண்டும் என்றார் அவர்.

நேற்று பக்கத்தான் ஹராப்பான் முதன் முறையாகக்  கோத்தா இஸ்கந்தார் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டது. ஜோகூர் பாரு சுகாதார இலாகா ஹராப்பான் கூட்டணிக்கு 3,000 வெள்ளி அபராதம் விதித்தது.


Pengarang :