ECONOMYSELANGOR

தொலைத் தொடர்பு கோபுரக் கட்டுமானப் பொருள்கள் பறிமுதல்- எம்.பி.எச்.எஸ் நடவடிக்கை

ஷா ஆலம், மார்ச் 3- அதிகாரிகள் வழங்கிய உத்தரவை மீறிப் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த தொலைத் தொடர்பு கோபுரக் கட்டுமானப் பொருள்களை உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது.

அந்தக் கட்டுமானப் பொருள்கள் கோலக் குபு பாரு, கம்போங் அசாம் கும்பாங்கிலுள்ள பொது இடத்தில் சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்ததாக நகராண்மைக் கழகத் தலைவர் முகமது ஹஸ்ரி நோர் முகமது கூறினார்.

அந்தக் கட்டுமானப் பொருள்களை அகற்றச் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்குக் கடந்த ஜனவரி 14 ஆம் தேதியே நோட்டிஸ் வழங்கப்பட்டிருந்ததாக அவர் சொன்னார்.

எனினும், நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அந்தக் கட்டுமானப் பொருள்கள் அகற்றப்படாதது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.

1974 ஆம் ஆண்டு சாலை,வடிகால்,கட்டிட சட்டத்தின் 46(3) பிரிவின் கீழ் அந்தப் பொருளைப் பறிமுதல் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும்
இழப்புக்கு நகராண்மைக் கழகம் பொறுப்பேற்காது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :