ECONOMYHEALTHNATIONAL

ஊக்கத் தடுப்பூசியைப் பெற மார்ச் 31 ஆம் தேதியே இறுதி நாள்- சினோவேக் தடுப்பூசி பெற்றவர்களுக்கு நினைவுறுத்து

செர்டாங், மார்ச் 3- சினோவேக் வகை தடுப்பூசியைப் பிரதானத் தடுப்பூசியாகப் பெற்றவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் என்ற நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஊக்கத் தடுப்பூசியை  மார்ச் 31 ஆம் தேதிக்குள் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.

அக்காலக்கட்டத்திற்குள் சம்பந்தப்பட்டவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெறாவிட்டால் அவர்களின் தடுப்பூசி அந்தஸ்து முழுமை பெறாத நிலையைக் காட்டும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

சினோவேக் தடுப்பூசியைப் பிரதான ஊசியாகப் பெற்ற பதினெட்டு வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெறத் தவறும் பட்சத்தில் வரும் ஏப்ரல் 1 தேதி தொடங்கி அவர்களின் தடுப்பூசி நிலையைக் குறிக்கும் வர்ணம் மஞ்சளில் இருந்து வெள்ளையாக மாறி விடும். இது இறுதி முடிவாகும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கோவிட்-19 நோய்த் தொற்றின் ஆகக் கடைசி நிலவரங்கள் தொடர்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைச் சொன்னார்.

சினோவேக் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற 18 வயதுக்கும் மேற்பட்டவர்களும் 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களும் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றாக வேண்டும் என்று சுகாதார அமைச்சு முன்னதாகக் கூறியிருந்தது.

எனினும், சம்பந்தப்பட்ட தரப்பினர் ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 1 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாகக் கைரி கடந்த மாதம் 24 ஆம் தேதி கூறியிருந்தார்.

இதுவரை சினோவேக் தடுப்பூசியை முதன்மை தடுப்பூசியாகப் பெற்ற 35,000 மூத்த குடிமக்கள் இன்னும் ஊக்கத் தடுப்பூசியைப் பெறவில்லை என்றும் கைரி சொன்னார்.

ஊக்கத் தடுப்பூசி கோவிட்-19 நோய்த் தொற்றின் கடும் தாக்கத்திலிருந்து மூத்த குடிமக்களைக் காக்கிறது. ஆகவே அவர்கள் அந்த தடுப்பூசியை அவசியம் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


Pengarang :