ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 259 ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உதவி நிதி- யாயாசான் சிலாங்கூர் வழங்கியது

ஷா ஆலம், மார்ச் 4- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவ யாசாசான் சிலாங்கூர் அறவாரியம் 72,500 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மாநிலத்தில் யாசாசான் சிலாங்கூர் ஏற்பாட்டு ஆதரவை வழங்கி வரும் 8 பள்ளிகளைச் சேர்ந்த 244 மாணவர்கள் மற்றும் 7 ஆசிரியர்களுக்கு இந்த உதவி நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.

வெள்ளச் சம்பவம் நிகழ்ந்து நீண்ட நாட்கள் ஆன போதிலும் அந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது அனுதாபம் கொண்டு அவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த நிதியுதவியை வழங்குவதாக அந்த அறவாரியம் கூறியது.

இதன் அடிப்படையில் அறவாரியத்தின்  சகாக்கள் மற்றும் பரிவுமிக்க வர்த்தக தரப்பினரின் ஆதரவுடன் நாங்கள் 72,500 வெள்ளியைத் திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளோம் என்று  அறவாரியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக  தங்களுக்கு நிதியுதவி வழங்கிய கிளந்தான் டாருள் நாய்ம் அறவாரியத்தின் இயக்குநர் அஸி ரஹிமி முகமது மற்றும் டி.டபள்யு.ஏ. சென்.பெர்ஹாட் நிறுவனம் ஆகிய தரப்பினருக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அது கூறியது.

இந்த உதவித் தொகையில் 56,000 வெள்ளி சிலாங்கூர் மாநில கல்வி இலாகா வாயிலாகவும் 16,500 வெள்ளி சிலாங்கூர் மாநில சமயக் கல்வி பிரிவு மூலமாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.


Pengarang :