ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தொழிற்சாலையில் தீ- 11 வயது சிறுமி கருகி மாண்டார்

சுங்கை பட்டாணி, மார்ச் 4- தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 வயது இந்தோனேசிய சிறுமி கருகி மாண்டார். இச்சம்பவம் இங்குள்ள பக்கார் ஆராங் தொழில் பேட்டையிலுள்ள செயற்கை ரப்பர் தயாரிப்புத் தொழிற்சாலையில் இன்று விடியற்காலை 3.00 மணியளவில் நிகழ்ந்தது.

அந்த தொழிற்சாலையின் அலுவலக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மிஷா காசே என்ற அச்சிறுமியின் உடல் கருகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக கோல மூடா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அனுவார் அப்துல் ரஹ்மான்  அப்துல் ரஹிம் கூறினார்.

அந்த சிறுமி அத்தொழிற்சாலை நிர்வாகியின் வளர்ப்பு பேத்தி என்றும் வழக்கமாக அவர் நிர்வாகியின் மகனுடன் அந்த  தொழிற்சாலையில் தங்குவார் என்றும் அனுவார் சொன்னார்.

சம்பவம் நிகழ்ந்த போது நிர்வாகியின் மகன் அலுவலக அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். தீ ஏற்பட்ட போது அவர் தெய்வாதீனமாக அங்கிருந்து தப்பி விட்டார். எனினும், அச்சிறுமியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அத்தொழிற்சாலையின் 95 விழுக்காட்டு பகுதி இத்தீவிபத்தில் முற்றாக சேதமடைந்தது.

இறந்த சிறுமியின் உடல் சவப் பரிசோதனைக்காக சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

 


Pengarang :