ECONOMYMEDIA STATEMENTNATIONAL

துபாய் கண்காட்சியில் வெ. 75 லட்சம் மதிப்புள்ள ஒப்பந்தங்களை சிலாங்கூர் பெற்றது

ஷா ஆலம், மார்ச் 5- கடந்த மாதம் நடைபெற்ற 2020 துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் பங்கேற்ற ஒரு வார காலத்தில் சிலாங்கூர் 75 லட்சம் வெள்ளி மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெற்றது.

இங்கிலாந்து, இந்தியா, போலந்து, இந்தோனேசியா, குவைத், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுடன் கொண்டிருக்கும் ஒத்துழைப்பின் வழி இந்த ஒப்பந்தங்கள் பெறப்பட்டதாக தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

சிலர் குறைந்த மதிப்பில் குத்தகைகளைப் பெற்றனர்.  ஒரு வேளை நமது பொருள்கள் மற்றும் சேவையை பரிசோதிக்கும் நோக்கில் அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம். ஆயினும் பலர் 40 லட்சம் வெள்ளி வரையிலான குத்தகைகளைப் பெற்றனர் என்றார் அவர்.

துபாயில் ஏழு நாட்களை நாங்கள் செலவிட்டோம். நமது தொழில்முனைவோரின் தயாரிப்புகளை சிலாங்கூர் உலக அளவிற்கு கொண்டுச் செல்வதற்கான தொடங்கப்படியாக இது அமைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

அந்த கண்காட்சியில் நமது நாட்டின் பங்கேற்பைப் பொறுத்த வரை சொந்த முகப்பிடத்தைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக சிலாங்கூர் விளங்குகிறது. வர்த்தகர்களுக்கு உதவுவதில் மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டை இது புலப்படுத்துகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உலகின் பல இடங்களுக்கு நாம் செல்லவிருக்கிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் நன்னிங் நகர் சென்றோம். இப்போது துபாய் சென்றுள்ளோம். நன்னிங் மக்கள் நமது பொருள்ளை நன்கு அறிந்துள்ளனர் என்று ரோட்சியா மேலும் குறிப்பிட்டார்.

தங்கள் வர்த்தகத்தை விரிவு படுத்த விரும்பும் தொழில்முனைவோர் யுபென் எனப்படும் சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவில் பதிந்து கொள்ள வேண்டும். அவர்கள் உங்களை அழைத்து விளக்கமளிப்பார்கள். பின்னர் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும் என்றார் அவர்.


Pengarang :