ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற சிறார்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது

கோலாலம்பூர், மார்ச் 5- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 27.4 விழுக்காட்டினர் அல்லது 974,355 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

“பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை இத்தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும், நாட்டில் நேற்று வரை 1 கோடியே 49 லட்சத்து 43 ஆயிரத்து 712 பேர் அல்லது 63.3 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்.

அதோடு 2 கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்து 291 பெரியவர்கள் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் 2 கோடியே 32 லட்சத்து 32 ஆயிரத்து 845 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 28 லட்சத்து  3 ஆயிரத்து 567 பேர் அல்லது 90.1 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 29 லட்சத்து 616 பேர் அல்லது 93.2 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று 81,724 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதில் 23,129 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 1,516 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 57,079 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 76 லட்சத்து 736 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 78 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.

 


Pengarang :