ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கால்பந்து போட்டியில் மோதல்- போலீசாரின் பணிக்கு இடையூறாக இருந்த இருவர் கைது

கோலாலம்பூர், மார்ச் 5- இங்குள்ள செராஸ் அரங்கில்  நடைபெற்ற கால்பந்து போட்டியில் இரு தரப்பு ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர் சிட்டி மற்றும் சிலாங்கூர் எப்.சி. குழுக்களுக்கிடையிலான போட்டி முடிவுக்கு வந்தப் பின்னர் இன்று விடியற்காலை 12.30 மணியளவில் இரு குழுக்களின் ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி இட்ஸாம் ஜாபர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்திலிருந்து போலீஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் மோதலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கலைக்க முயன்றனர். அங்கிருந்து கலைந்து செல்லும்படி இடப்பட்ட உத்தரவை மதிக்கத் தவறியதற்காக இருவர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

போலீசாரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதன் பேரில் 22 மற்றும் 23 வயதுடைய அவ்விருவரும் குற்றவியல் சட்டத்தின் 148 வது பிரிவின் கீழ் 3 மூன்று நாட்களுக்கு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் தகவலறிந்தவர்கள் செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :