ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

எரிபொருள் உபரி கட்டணம்  மீண்டும் அமல்- ஏர் ஆசியா நடவடிக்கை

கோலாலம்பூர், மார்ச் 5 - அனைத்து உள்நாட்டு மற்றும் அனைத்துலக விமான சேவைகளுக்கும் வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் எரிபொருள் உபரி கட்டணத்தை ஏர் ஆசியா மலேசியா நிறுவனம் மீண்டும் அறிமுகப்படுத்துகிறது.

 பீப்பாய் ஒன்றுக்கு 120 அமெரிக்க டாலரை (வெ.501.36) தாண்டிய விமான எரிபொருள் விலையைச் சமாளிப்பதற்காக  அந்நிறுவனம் இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது.

மார்ச் 8  மற்றும் அதற்குப் பிறகு செய்யப்படும்  விமான முன்பதிவுகளுக்கு இந்த எரிபொருள் கூடுதல் கட்டணம் பொருந்தும். மார்ச் 8 ஆம் தேதிக்கு முன் செய்யப்பட்ட பதிவுகளுக்கு இதனால் பாதிப்பில்லை.

 அனைத்து உள்நாட்டு வழித்தடங்களுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணம் 10.00 வெள்ளியாகும் அதே நேரத்தில் ஒன்று முதல் இரண்டு மணிநேர பயண வழித்தடங்களுக்கான கட்டணம் 25  வெள்ளியாகும்.

 இரண்டு முதல் மூன்று மணி நேரம், மூன்று முதல் நான்கு மணி நேரம் மற்றும் நான்கு மணி நேரத்திற்கும் மேலான அனைத்துல வழிகளுக்கான கட்டணம் முறையே வெ.35.00, வெ.50.00 மற்றும் வெ.60.00 ஆகும் என்று  அந்த குறைந்த கட்டண விமான நிறுவனம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஐரோப்பாவின் நிலவரம் மற்றும் பிற வெளி காரணங்களால் உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் எண்ணெய் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாக
ஏர்ஏசியா மலேசியாவின் தலைமைச் செயல் அதிகாரி ரியாட் அஸ்மத் கூறினார்.

Pengarang :