ECONOMYNATIONALWANITA & KEBAJIKAN

விதவைகள் வீட்டிலிருந்து வேலை செய்ய முதலாளிகள் அனுமதிக்க வேண்டும்- பிரதமர் வலியுறுத்து 

கோலாலம்பூர், மார்ச் 9- அண்மையில்  கணவரைப் பறிகொடுத்த பெண்களைக் குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டிலிருந்து வேலை செய்ய முதலாளிகள்  அனுமதிக்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெண்கள் தொடர்ந்து ஆக்கத் திறன் கொண்டவர்களாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் அரசாங்கம் நேற்று அறிவித்த ஆறு அம்சத் திட்டத்தில் இந்தச் சலுகையும் இடம் பெற்றுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

தங்கள் வாழ்க்கைத் துணையைச் சமீபத்தில் இழந்த பெண்கள் எதிர்நோக்கும் துக்கம் மற்றும் சுமையை நாம் உணர்ந்துள்ளோம். அத்தகைய பெண்கள் தங்கள் குடும்பத்தைக் கவனிப்பதற்கு ஏதுவாக அவர்களை வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அனுமதிக்கும்படி துறைத் தலைவர்களும் உயர் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று அவர் சொன்னார்.

இது தவிர்த்து, பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனங்களில் குறைந்தது ஒரு இயக்குநர் பெண்ணாக இருப்பதைக் கட்டாயமாக்கும் நடைமுறை வரும் செப்டம்பர் முதல் தேதியும் இதர நிறுவனங்களில் அடுத்தாண்டு ஜூன் முதல் தேதியும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் மகளிர் தினம் ஒவ்வோராண்டும் மார்ச் 8 ஆம் தேதி மாநில மற்றும் தேசிய நிலையில்  அனுசரிக்கப்பட வேண்டும் என என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

இங்குள்ள கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு மகளிர் தின நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.


Pengarang :