ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஹராப்பான் அரசு வீழ்த்தப்பட்டது முதல் ஜோகூர் அரசியலில் நிலைத்தன்மை இல்லை

மூவார், மார்ச் 11- கடந்த 2018 பொதுத் தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) அரசாங்கம் வீழ்த்தப்பட்டது முதல் நாட்டில் குறிப்பாக ஜோகூர் மாநிலத்தில் அரசியல் நிலைத்தன்மையற்றதாக இருந்து வருகிறது.

பிரதமரும் ஜோகூர் மந்திரி புசாரும் அடிக்கடி மாற்றப்பட்டு வருவது நிலைத்தன்மையற்ற அரசியலைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று கெஅடிலான் கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைமைத்துவ மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாட்டில் அரசியல் நிலைத்தன்மையற்ற போக்கு தொடர்ந்து நீடிக்காமலிருப்பதை உறுதி செய்வதற்காக ஹராப்பான் கூட்டணி மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு மக்கள் தேர்தலில் கெஅடிலான் கட்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஷெரட்டோன் நகர்வுக்குப் பின்னர் அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்ட அரசாங்கமே அரசியல் நாட்டில் நிலைத்தன்மை இல்லாமல் போனதற்குக் காரணம் என்றும் அவர் சொன்னார்.

ஜோகூரிலும் மத்திய கூட்டரசு நிலையிலும் அரசாங்கம் கவிழாதிருப்பதை உறுதி செய்வதற்காக நாம் பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொண்டோம். ஆனால், பெரிக்கத்தான் அரசாங்கத்தை அம்னோவே கவிழ்த்து விட்டது. முன்பு மாநில மந்திரி புசாரை மாற்றியதும் இவர்கள்தான் என்றார் அவர்.

இங்குள்ள புக்கிட் நானிங் தொகுதியில் கெஅடிலான் வேட்பாளர் முகமது யாசுருடின் குஸ்னிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த போது சிலாங்கூர் மந்திரி புசாருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :