ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTSELANGOR

நிலச் சரிவு- வீட்டை உடனடியாகக் காலி செய்ய 48 குடியிருப்பாளர்களுக்கு உத்தரவு

அம்பாங், மார்ச் 11- நிலச்சரிவு ஏற்பட்ட தாமான் புக்கிட் பெர்மாய் 2 பகுதியில் வசிக்கும் 48 குடும்பங்கள் தங்கள் வீடுகளை உடனடியாகக் காலி செய்யுமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

குறைந்தது ஐந்து நாட்களுக்கு வீடுகளைக் காலி செய்யும்படி சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மீண்டும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதைக் கருத்தில் கொண்டு அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் அப்பகுதியை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அவர் சொன்னார்.

பொது மக்கள் குடியிருப்பதற்கு அந்தப் பகுதி பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்தும் பணியை அக்காலக்கட்டத்தில் பொதுப்பணித் துறை மற்றும்  மலேசியப் பொதுப்பணி கழகத்தின் அதிகாரிகள் மேற்கொள்வர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நான்கு வரிசைகளில் உள்ள 48 வீடுகள் உடனடியாக காலி செய்யப்பட வேண்டும். கூடின பட்சம் ஐந்து நாட்களுக்கு அவர்கள் அங்கு குடியிருப்பதை  தவிர்க்க வேண்டும்.

இக்காலக்கட்டத்தில் அப்பகுதியின் பாதுகாப்புத் தன்மை குறித்த சோதனையை அதிகாரிகள் மேற்கொள்ள இயலும் என்றார் அவர்.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட தாமான் புக்கிட் பெர்மாய் 2 பகுதிக்கு வருகை புரிந்த பின்னர்ச் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

அப்குதியை அமலாக்கத் தரப்பினர் தொடர்ந்து கண்காணித்து வருவர் என்றும் அப்பகுதியின் நிலை குறித்த விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :