ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

மலிவு விற்பனைத் திட்டத்தின் வெற்றிக்கு பி.கே.பி.எஸ். ஊழியர்கள் முழு பங்களிப்பு

கோம்பாக், மார்ச் 13- மாநில அரசின் மக்கள் பரிவு  விற்பனைத் திட்டம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) அனைத்து துறைகளை சேர்ந்த ஊழியர்களையும் முழுமையாக ஈடுபடுத்தியுள்ளது.

இத்திட்டம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக  விற்பனை பிரிவு மட்டுமின்றி இதர பிரிவுகளும் இதில் பங்கேற்றுள்ளதாக அந்த கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

இன்று சுங்கை துவாவில் நடைபெறும் இந்த மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்தில் 14 பி.கே.பி.எஸ். பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அவர சொன்னார்.

பி.கே.பி.எஸ். மாநில அரசை பிரதிநிதிக்கும் ஒரு அமைப்பாகும். பொதுமக்களுக்கு நியாயமான விலையில் பொருள்கள்  கிடைப்பதை உறுதி செய்வது நமது கடமையாகும்  என்றார் அவர்.

பொது மக்களுக்கு குறைந்த விலையில் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கிலான இத்திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள 64 இடங்களில் வார இறுதி நாட்களில் மேற்கொள்ளப்படும். நோன்பு பெருநாள் வரை இத்திட்டம் அமலில் இருக்கும்.

இத்திட்டத்தின் கீழ் நடுத்தர 10,000 கோழிகள் , 3,100 கிலோ இறைச்சி, 6,200 கிலோ கெம்போங் மீன், 315,000 பி கிரேட் முட்டைகளை விற்பனை செய்ய திட்டமிட்டப்பட்டுள்ளது.

நடுத்தர அளவிலான கோழி 12.00 வெள்ளி விலையிலும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளி விலையிலும் கெம்போங் அல்லது செலாயாங் மீன் ஒரு பேக் 8.00 வெள்ளி விலையிலும் விற்கப்படுகின்றன.


Pengarang :