ECONOMYPBTSELANGOR

வெள்ள உதவி- அரசு நிறுவனப் பணியாளர்கள், தன்னார்வலர்களுக்குச் சுல்தான் பாராட்டு

ஷா ஆலம், மார்ச் 14- கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியில் அயராது ஈடுபட்ட  இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் அல்ஹாஜ் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்தப் பணியாளர்களின் முழு அளவிலான ஈடுபாடு மீட்பு பணிகளைச் சீராக மேற்கொள்வதற்கும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு ஏதுவாகத் துப்புரவுப் பணிகளை விரைந்து மேற்கொள்வதற்கும்  பெரிதும் துணை புரிந்தது என்று அவர் சொன்னார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் பெரிதும் துணை நின்ற 50,000 த்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் குறிப்பாக  டீம் சிலாங்கூர் மற்று சுக்காரேலாவான் சிலாங்கூர் (செர்வ்) அமைப்பினரையும் இவ்வேளையில் மறக்க இயலாது.

வெள்ளம் பாதித்த இடங்களில் இவர்கள் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதில் தீவிரம் காட்டினர் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில 14 வது சட்டமன்றத்தின் ஐந்தாம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் மாட்சிமை தங்கிய சுல்தான் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :