ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பருவ மழை காலத்தில் விழிப்புடன் இருப்பீர்- பொதுமக்களுக்கு அறிவுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 14- பொதுமக்கள் குறிப்பாக தாழ்வான பகுதிகளிலும் ஆற்றோரங்களிலும் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடனும் பருவமழை மாற்ற காலத்தை எதிர்கொள்வதற்கு தயார் நிலையிலும் இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பருவ மழை மாற்றம் காலம் இன்று தொடங்கி வரும் மே மாதம் மத்திய பகுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வடிகால் மற்றும் நீர் பாசனத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ இஞ்சினியர் டாக்டர் முகமது நாசீர் முகமது நோ கூறினார்.

இக்காலக்கட்டத்தில் குறுகிய நேரத்திற்கு இடி, மின்னல், கனத்த மழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்குரிய சாத்தியம் உள்ளதாக அவர் சொன்னார்.

இதன் காரணமாக, ஆறுகளின் கொள்ளலவு, வடிகால் முறை, நீர் சேகரிப்பு குளங்கள், நடப்பு வெள்ளத் தணிப்பு வசதிகள் ஆகியவற்றின் ஆற்றலைப் பொறுத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குப்பைகளை கண்ட இடங்களில் வீச வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய தவறான செயல்கள்  வடிகால்களில் நீரோட்டத்தைப் பாதிக்கும் என்றார் அவர்.

பொதுமக்களும் மீட்பு பணியாளர்களும் வெள்ளத்தை எதிர்கொள்ள முன்கூட்டியே தயார் நிலையில் இருப்பதற்கு ஏதுவாக வெள்ளத்தை முன்னதாக கணித்து எச்சரிக்கை விடுக்கக்கூடிய வெள்ள கணிப்பு எச்சரிக்கைத் திட்டத்தை தமது துறை அமல்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது இத்திட்டம் கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங்கில் முழு அளவில் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

 


Pengarang :