ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

22,535 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- தீவிரச் சிகிச்சைப் பிரிவில் 384 பேர்

ஷா ஆலம், மார்ச் 14- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 3,715 குறைந்து 22,535 ஆகப் பதிவானது.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 185 பேர் கடும் தாக்கம் கொண்ட மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

எஞ்சிய நோயாளிகள் நோய்க்கான அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பைக் கொண்டுள்ளதா அவர் சொன்னார்.

கடும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள  நோயாளிகளில் 109 பேர் அல்லது 58.92 விழுக்காட்டினர்  அறுபது வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்றும் மேலும் 53 பேர் அல்லது 28.65 விழுக்காட்டினர் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

எஞ்சியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெறாதவர்கள் அல்லது அறவே பெறாதவர்கள், இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்று ஊக்கத் தடுப்பூசியைப் பெறாமலிருப்பவர்கள் மற்றும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றவர்களாவர் என்று அவர் குறிப்பிட்டார்.

பிரிவு வாரியாகக் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வருமாறு-

1 ஆம் பிரிவு- 8,637 சம்பவங்கள் (38.3 விழுக்காடு)
2 ஆம் பிரிவு- 13,713 சம்பவங்கள் (60.85 விழுக்காடு)
3 ஆம் பிரிவு- 72 சம்பவங்கள் (0.32 விழுக்காடு)
4 ஆம் பிரிவு- 63 சம்பவங்கள் (0.28 விழுக்காடு)
5 ஆம் பிரிவு- 50 சம்பவங்கள் (0.22 விழுக்காடு)

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு நேற்று நாடு முழுவதும் 87 பேர் பலியானதாக கூறிய டாக்டர் நோர் ஹிஷாம், அவர்களில் 25 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறினார்.

நேற்று மொத்தம் 25,356 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 68 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :