ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

வெள்ளத்தை முன்கூட்டியே கணிக்கப் பூமியின் மேற்பரப்பு மீது ஆய்வு- சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், மார்ச் 15- வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் மழைப் பொழிவு குறித்த துல்லியமான தரவுகளைப் பெறுவதற்கு ஏதுவாகக் குறிப்பிட்ட பகுதியின் நிலப்பரப்பு குறித்த ஆய்வை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

வெள்ள முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை திட்டத்தின் (பி.ஆர்.ஏ.பி.) ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆய்வு தற்போது இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளதாக அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

நிலப்பரப்பு முழுவதும் விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தை அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் ஏற்படுத்தியுள்ளது. மழைப் பொழிவு பரவலாக இருக்கும் பட்சத்தில் நீரோட்டத்தையும் வெள்ளம் ஏற்படும் பகுதியையும் நம்மால் கணிக்க முடியும் என்று அவர் சொன்னார்.

நிலப்பரப்பு பற்றிய முழுமையான தரவுகள் மற்றும் விபரங்கள் இல்லாத பட்சத்தில் நம்மால் விரைந்து செயல்பட முடியாது என்று மாநில சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது அவர் குறிப்பிட்டார்.

மழைப் பொழிவை துல்லியமாக கணிப்பதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பந்திங் உறுப்பினர் லாவ் வேங் சான் கேள்வியெழுப்பியிருந்தார்.

அண்மையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதற்கு வரலாறு காணாத அளவில் 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ததே காரணம் என்று அவர் இஷாம் சொன்னார்.


Pengarang :