ECONOMYPBTSELANGOR

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிலாங்கூர் அரசின் உதவி- எதிர்கட்சி பாராட்டு

ஷா ஆலம், மாரச் 16-  கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு தொடக்கிய பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டம் எதிர்க்கட்சியின் பாராட்டைப் பெற்றுள்ளது.

மொத்தம் 10 கோடியே 60 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டிலான இத்திட்டம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைப்பதில் பெரிதும் துணை புரிந்துள்ளதாகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ரிஸாம் இஸ்மாயில் கூறினார்.

நிதி வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்ட போதிலும் இத்திட்டத்தை அமல்படுத்தியதற்காக மாநில அரசுக்கு நன்றி கூறித்தான் ஆக வேண்டும் என்று அவர் சொன்னார்.

மாநிலச் சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தஙகிய சிலாஙகூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய போது அவர் அவர் இவ்வாறு கூறினார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்ட்டன.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 வெள்ளியும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10,000 வெள்ளியும் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன. இந்த உதவித் திட்டத்தின் வழி 114,081 குடும்பங்கள் பயனடைந்தன.


Pengarang :