ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

பாதுகாப்பற்ற மலைச்சாரல்- வீடுகளைக் காலி செய்யப் புக்கிட் பெர்மாய் 2 குடியிருப்பாளர்களுக்கு உத்தரவு

ஷா ஆலம், மார்ச் 16 – அம்பாங், தாமான் புக்கிட் பெர்மாய் 2 இல் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள மலைச் சாரல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகக் கருதப்படுகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதியில் லேசான மண் நகர்வு காணப்படுவதோடு மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டால் எண்ணற்ற குடியிருப்பாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதை உலு லங்காட் மாவட்டப் பேரிடர் குழு கண்டறிந்துள்ளதாக அவர் சொன்னார்.

அந்த ஆய்வின் அடிப்படையில் பல சிறிய மண் நகர்வுகள்  கண்டறியப்பட்டு உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இரண்டாவது அல்லது மூன்றாவது சுற்று நிலச்சரிவு ஏற்பட்டால் பாதிக்கப்படக்கூடிய 72 வீடுகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் என்றார் அவர்.

ஆகவே, எந்தவொரு அசம்பாவிதச் சம்பவங்களையும் தவிர்க்கும் வகையில் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்யுமாறு அக்குழு உத்தரவிட்டுள்ளது என்று அவர் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.

இந்த உடனடி வெளியேற்ற உத்தரவின் வாயிலாக நிலச் சரிவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்வதற்கான பணியை விரைந்து மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

மலைச் சாரலைப் பலப்படுத்துவதற்கு உண்டாகும் செலவு இன்னும் கணக்கிடப்படாத போதிலும் அப்பணியை விரைந்து மேற்கொள்ளத் தாங்கள் முடிவெடுத்துள்ளதாக அமிருடின் மேலும் சொன்னார்.

கடந்த வாரம் இங்கு ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் உயிரிழந்ததோடு ஒருவர் காயமுற்றார். மேலும் 15 வீடுகள் மற்றும் 10 வாகனங்களைச் சேதமடைந்தன


Pengarang :