ECONOMYMEDIA STATEMENT

கொலை வழக்கு- தூக்கு தண்டனையிலிருந்து தப்பினார் சந்திரசேகரன்- 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பு

புத்ரா ஜெயா, மார்ச் 16– கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த இந்திய ஆடவர் ஒருவர் தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தன் காதலிக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக என். சந்திரசேகரன் (வயது 34) என்ற அந்த ஆடவருக்கு இங்குள்ள மேல் முறையீட்டு நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

டத்தோ நோர் பீ அரிபின், டத்தோ அகமது நஸ்பி யாசின், டத்தோ முகமது நஸ்லான் முகமது கசாலி ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு சந்திரசேகரனுக்கு எதிரான இந்த முடிவை ஏகமனதாக எடுத்தது.

இந்த வழக்கின் மேல் முறையீட்டில் போதுமான அளவு முகாந்திரம் இருப்பதை கண்டறிந்த நீதிபதி நோர் பீ, தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து அதற்கு பதிலாக தண்டனைச் சட்டத்தின்  304(ஏ) பிரிவின் கீழ் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இரவு 11.00 மணிக்கும் மறுநாள் அதிகாலை 6.00 மணிக்கும் இடையே கம்போங் பத்து பீசி, லாடாங் செங்கேட், சிம்பாங் பூலாய் என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டில் 17 வயதான எஸ். துர்கா தேவி எனும் தன் காதலியை படுகொலை செய்த குற்றத்திற்காக சந்திரசேகரனுக்கு ஈப்போ உயர் நீதிமன்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி மரண தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் சந்திரசேகரன் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அபிபுடின் அகமது  ஹபிபி, சந்திரசேகரனுக்கு எதிராக தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து அதற்கு பதிலாக தண்டனைச் சட்டத்தின் 304(ஏ) பிரிவில் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக் கோரி மேல் முறையீடு செய்திருந்தார்.


Pengarang :