ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 எஸ்.ஒ.பி. தொடர்பான சுய விழிப்புணர்வு பிரசாரத்தை மாநில அரசு தொடரும்- சித்தி மரியா தகவல்

ஷா ஆலம், மார்ச் 16– நாடு வரும் ஏப்ரல் முதல் தேதி எண்டமிக் எனப்படும் குறுந்தொற்று கட்டத்திற்கு மாறினாலும் அன்றாட நடவடிக்கைகளில் நிலையான நிர்வாக நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) கடைபிடிப்பது தொடர்பான விழிப்புணர்வைப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பணியில் மாநில அரசு தொடர்ந்து ஈடுபட்டு வரும்.

ஒமிக்ரோன் வகை நோய்த் தொற்று பரவல் காரணமாகக் கோவிட்-19 எண்ணிக்கை அதிகரித்த போதிலும் கடுமையான எஸ்.ஒ.பி. விதிகளை அமல்படுத்தும் திட்டம் மாநில அரசுக்கு இல்லை என்று பொதுச் சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
பொது இடங்களில் கடுமையான எஸ்.ஒ.பி. விதிகளை அமல்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் உள்ளதே தவிர மாநில அரசுக்கு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
எனினும், நோன்புப் பெருநாள் நெருங்கி வருவதைக் கருத்தில்  கொண்டு  கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநில அரசு ஊராட்சி மன்றங்கள் மூலம் ரமலான் சந்தைகளில் எஸ்.ஒ.பி. விதிகளின் அமலாக்கத்தைக் கண்காணிக்கும் என்றும் அவர் சொன்னார்.
மாநிலச் சட்டமன்றத்தில் இன்று சிலாங்கூரில் கோவிட்-19 எஸ்.ஒ.பி. விதிமுறைகளின் அமலாக்கம் குறித்து ஸ்ரீ கெம்பாங்கான் உறுப்பினர் இயான் யோங் ஹியான் வா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் டாக்டர் சித்தி மரியா இவ்வாறு தெரிவித்தார்.
அனைத்துலகப் பயணிகளுக்கு நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டு விட்ட நிலையில் பொதுமக்கள்  தங்களின் உடலாரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதில் தாங்களாகவே அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :