ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர் சட்டமன்றம் தற்போதைக்குக் கலைக்கப்படாது- தவணை காலம் முடியும் வரை ஆட்சி தொடரும்

ஷா ஆலம், மார்ச் 17– நாட்டில் பொதுத் தேர்தல் திடீரென நடத்தப்பட்டால் சிலாங்கூர் அரசு சட்டமன்றத்தைக் கலைக்காது.

பக்கத்தான் ஹராப்பன் கூட்டணி ஆட்சி புரியும் மூன்று மாநிலங்களில் அடுத்தாண்டு மே மாதம் வரை ஆட்சியைத் தொடர்வது என  முதலமைச்சர் மற்றும் மந்திரி புசார்கள் முடிவெடுத்துள்ளதாகச் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தவணை காலம் முடியும் வரை நிர்வாகத்தைத் தொடர்வது என ஒன்றுபட்டு எடுத்த முடிவு சிறப்பானதாகவும் ஆக்ககரமானதாகவும் இருக்கும். அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வரை ஆட்சி தொடரும் என்பது இதன் பொருளாகும் என்று அவர் சொன்னார்.

சட்டமன்றக் கலைப்பு என்பது என்னிடமிருந்து வந்த அறிவிப்பு அல்ல. அதே சமயம், இதற்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் ஒப்புதல் தேவை என்றார் அவர்.

சில மாநில மந்திரி புசார்களின் பரிந்துரையின் பேரில் சட்டமன்றக் கலைப்பு தொடர்பான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகச் சட்டமன்றக் கூட்டத்திற்குப் பின்னர்ச் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

மாநில அரசு வரைந்துள்ள பல்வேறு திட்டங்கள் இன்னும் அமலாக்க நிலையில் உள்ளதால் கூடிய விரைவில் தேர்தலை நடத்துவது பொருத்தமாக இருக்காது என்று அவர் மேலும் சொன்னார்.

கடந்த ஈராண்டுகளாக நாம் கோவிட்-19 பெருந்தொற்றுடன் போராடி விட்டோம். இதனால் பல திட்டங்களை நிறைவேற்ற இயலாது போய்விட்டது. உதாரணத்திற்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிலாங்கூர் சுத்திகரிக்கப்படாத நீர் உத்தரவாதத் திட்டம் இன்னும் அமலாக்கம் காணவில்லை.

மேலும், பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு திட்டத்தை நாம் விரைவில் ஆரம்பிக்கவிருக்கிறோம். ஆகவே தேர்தலுக்கு நாம் அவசரம் காட்டக்கூடாது. பொறுமை இல்லாத சிலர் தேர்தலை நடத்தி ஆட்சியைப் பிடிப்பதற்கு முனைப்பு காட்டக்கூடும் என்றார் அவர்.


Pengarang :