ECONOMYNATIONALTOURISM

இவ்வாண்டில் 20 லட்சம் வருகையாளர்களை ஈர்க்கச் சுற்றுலா அமைச்சு இலக்கு

கோலாலம்பூர், மார்ச் 17 –  இவ்வாண்டு 20 லட்சம் சுற்றுப் பயணிகளை ஈர்ப்பதைச் சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சு இலக்காகக் கொண்டுள்ளது. இதன் மூலம் 680 கோடி வெள்ளிக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டவும் அது திட்டமிட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு கோவிட் -19 நோய்த் தொற்றுப் பரவலால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறைக்குப் புத்துயிர் அளிக்கும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி நம்பிக்கை தெரிவித்தார் .

உள்நாட்டு சுற்றுப் பயணிகளுக்கு நாங்கள் எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை, ஏனெனில், கடந்த 2019 ஆம் ஆண்டில், உள்நாட்டு சுற்றுலா மூலம் நாங்கள் 103 பில்லியன் வெள்ளியை வருமானமாக ஈட்டினோம்.

எனவே, 2019 ஆம் ஆண்டைப் போல லாபம் அடைவது மிகவும் கடினமாக இருந்தாலும் அதில் குறைந்தபட்சம் 50 விழுக்காட்டு லாபத்தைப் பெறுவோம் என்று நம்புகிறோம் என்றார் அவர்.

மக்களவையில் நேற்று அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

நாடு வரும் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி எண்டமிக் எனப்படும் குறுந்தொற்று கட்டத்திற்கு மாறும் என்றும் அதனைத் தொடர்ந்து நாட்டின் எல்லைகள் வெளிநாட்டினருக்குத் திறந்து விடப்படும் என்றும் பிரதமர்  டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோ முன்னதாக அறிவித்திருந்தார்.


Pengarang :