ECONOMYMEDIA STATEMENT

“டத்தோஸ்ரீ“ விருதுக்கு ஆசைப்பட்டுச் சுமார் 330,000 வெள்ளியை இழந்த ஆடவர்

கோலாலம்பூர், மார்ச் 17– டத்தோஸ்ரீ விருதைப் பெற்றுத் தருவதாகக் கூறிய கும்பல் ஒன்றின் ஆசை வார்த்தையை நம்பி ஆடவர் ஒருவர் 294,850 வெள்ளியை இழந்தார்.

மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் 33 வயது ஆடவரே இச்சம்பவத்தில் ஏமாற்றப்பட்டவராவார் என்று கோலாலம்பூர் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் ஏசிபி முகமது மஹிடிஷாம் இஷாக் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் தேதி உள்நாட்டு ஆடவர் ஒருவர் சம்பந்தப்பட்ட அந்த இளைஞரை அணுகி உயரிய டத்தோஸ்ரீ விருதைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்ததாக அவர் சொன்னார்.

எனினும், அந்த விருதைப் பெற வேண்டுமானால் அரண்மனைத் தரப்புக்கு நன்கொடையாக 300,000 வெள்ளியைத் தர வேண்டும் என்று அந்தச் சந்தேகப் பேர்வழி நிபந்தனை விதித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட அவ்விளைஞர் கடந்த ஜனவரி 14 முதல் 31 வரையிலான காலக் கட்டத்தில் 200,000 வெள்ளி ரொக்கமாகவும் 94,850 வெள்ளியைச் சந்தேக நபரின் வங்கிக் கணக்கிலும் சேர்த்துள்ளார்.

பணம் பட்டுவாடா செய்யப்பட்ட பின்னர் அந்த இளைஞரிடம் ஒரு மாநிலத்தின் உயரிய விருது வழங்கப்பட்டதற்கான சான்றுக் கடிதம், இரு செத்தியா டிராஜா உறுப்பினர் அடையாள அட்டைகள், காரில் பொருத்தும் இரு சின்னங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

எனினும், அந்த இளைஞரின் நண்பரும் டத்தோஸ்ரீ விருதைப் பெற்றவருமான மற்றொரு ஆடவர் இந்த விருது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ளார்.


Pengarang :