ECONOMYHEALTHNATIONAL

நோன்புப் பெருநாளை கருத்தில் கொண்டு ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவீர்- முதியோருக்கு கைரி வேண்டுகோள்

கோலாலம்பூர், மார்ச் 17- ரமலான் மாதம் நெருங்கி வரும் நிலையில் தங்களின் சுய பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊக்கத் தடுப்பூசியை விரைந்து பெற்றுக் கொள்ளுமாறு மூத்த குடிமக்களை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கேட்டுக் கொண்டார்.

நோன்பு மாதத்தில் பெரும்பாலான முதியோர் பள்ளிவாசல்களில் தராவே தொழுகையில் ஈடுபடுவர் என்பதால் அவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவது அவசியம் என்று அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறினார்.

ரமலான் மாதம் நெருங்குவதால் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானது. நமது பெற்றோர் இப்போது வெளியில் செல்லாதிருக்கலாம். ஆனால் ரமலான் மாதத்தின் போது தொழுகைக்காக அவர்கள் குழுவாக பள்ளிவாசல்  செல்வர். தங்களுக்கு மேலும் பாதுகாப்பளிப்பதற்கு ஏதுவாக அவர்கள் ஊக்கத் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியம். பிறகு நடப்பதை இறைவனிடம் விட்டுவிடுவோம் என்றார் அவர்.

நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 105 மரணங்கள் சம்பவித்ததாக கூறிய அவர், தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத மற்றும் ஊக்கத் தடுப்புசியை பெறாதவர்களே நோய்த் தொற்றுக்கான ஆபத்தை அதிகம் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

மருத்துவமனைகளில் அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மரண எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாம் முயன்று வருகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :