ECONOMYSELANGOR

கோலக் கிள்ளானில் புதிய மேம்பாட்டுப் பகுதிகளில் வடிகால் முறையை மறுஆய்வு செய்வீர்- அஸ்மிஸாம் வலியுறுத்து

ஷா ஆலம், மார்ச் 17– மோசமான வெள்ளப் பேரிடர் ஏற்படுவதைத் தவிர்க்க புதிய மேம்பாட்டுப் பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட வடிகால் முறையை மறுஆய்வு செய்யும்படி கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

பூலாவ் இண்டா பாரம்பரிய கிராமப் பகுதியில் இத்தகைய ஆய்வினை கிள்ளான் நகராண்மைக் கழகமும் வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறையும் மேற்கொள்ள வேண்டும் என்று அஸ்மிஸாம் ஸமான் ஹூரி கேட்டுக் கொண்டார்.

முன்பு இவ்வட்டாரம் குடியிருப்பு பகுதியாக இருந்தது. தற்போது அது தொழில்பேட்டைப் பகுதியாக மாற்றப்பட்டு  மைரா கார்டன் திட்டமும் இங்கு மேற்கொள்ளப்படுகிறது இதனால் இங்குள்ள மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதனால் கன மழை பெய்யும் போதெல்லாம் வெள்ளம் ஏற்படுகிறது. கடந்தாண்டு டிசம்பர் 17 ஆம் தேதி மிகவும் மோசமான வெள்ளப் பாதிப்பும் இங்கு ஏற்பட்டது. கிள்ளான் நகராண்மைக் கழகம் அங்கீகரித்த வடிகால் முறையும் நிர்ணயிக்கப்பட்ட தரத்தைக் கொண்டிருக்கவில்லை என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் இன்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

கம்போங் தெலுக் கோங் பகுதியில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சாலைகள் இன்னும் சீரமைக்கப்படாமலிருப்பதாக கூறிய அவர், இவ்விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தும்படி கிள்ளான் நகராண்மைக் கழகம் மற்றும் பொதுப்பணித் துறையைக் கேட்டுக் கொண்டார்.


Pengarang :