ECONOMYHEALTHSELANGOR

ரவாங், செல்கேட் மருத்துவமனை கட்டுமானம் 45 விழுக்காடு பூர்த்தி- சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், மார்ச் 18- ரவாங் செல்கேட் மருத்துவமனையின் கட்டுமானம் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை 45 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா  மாமுட் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலின் விளைவாக ஏற்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த மருத்துவமனையின் கட்டுமானத்தில் தாமதம் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் பொது முடக்கம் 3.0 ஆகிய காரணங்களால் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும், கட்டுமானத் துறைகளில் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறையும் நிலவுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதுதவிர, பொது முடக்கம் காரணமாக அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட சுணக்கம் கட்டுமானப் பொருள் விநியோகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியதோடு அப்பொருள்களின் விலையும் அபரிமித உயர்வைக் கண்டது என்று அவர் சொன்னார்.

சட்டமன்றத்தில் இன்று ரவாங் உறுப்பினர் சுவா வேய் கியாட் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். ரவாங், செல்கேட் மருத்துவமனையின் கட்டுமானத்தில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணம் மற்றும் கட்டுமானப் பணியை விரைவாக மேற்கொள்ள மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து சுவா கேள்வியெழுப்பியிருந்தார்.

அந்த செல்கேட் மருத்துவமனையை மாநில அரசின் துணை நிறுவனமான செல்கேட் கார்ப்பரேஷன் நிறுவனம் நிர்மாணித்து வருவதாக சித்தி மரியா குறிப்பிட்டார்.


Pengarang :