ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் டிங்கியை கட்டுப்படுத்துவதில் 3,817 கோம்பி பணிப்படை உறுப்பினர்கள் உதவி

ஷா ஆலம், மார்ச் 19. மாநிலத்தில் பல்வேறு நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் கோம்பி எனப்படும் நடத்தை மாற்றத்திற்கான தொடர்பு பணிக்குழுவின் 3,817 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் மேற்பார்வையில் செயல்படும் இந்த குழுவினர் டிங்கி மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை 464 இடங்களில் மேற்கொள்வதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

டிங்கி நோய்ப் பரவலை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான தகவல்களைப் பரப்புவதில் பயிற்சி பெற்றவர்கள் இந்த கோம்பி தன்னார்வலர் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தில்  சமூகத்தின் ஈடுபாடு, சிலாங்கூர் மாநிலத்தில் டிங்கியை கட்டுப்படுத்துவதில் சுகாதார அமைச்சுக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது என்று அவர் சொன்னார்.

இதனிடையே, இவ்வாண்டு மார்ச் மாத 5 ஆம் தேதி வரையிலான 9 நோய்த் தொற்று வாரங்களில் சிலாங்கூரில் டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 1,112 சம்பவங்கள் அதாவது 35.9 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெட்டாலிங் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவத 1,460 டிங்கி சம்பவங்கள் அக்காலக்கட்டத்தில் பதிவாகின என்று அவர் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கோம்பி திட்டம் பல நாடுகளில் தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது.


Pengarang :