ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சொக்சோவில் பதிந்து கொள்ள பகுதி நேர ஊடகவியலாளர்களுக்கு வேண்டுகோள்

அலோர் ஸ்டார், மார்ச் 21 – நாட்டிலுள்ள பகுதிநேர ஊடகவியலாளர்கள்  பாதுகாப்புப் பலன்களைப் பெற  சொக்சோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு அமைப்பில் பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மருத்துவ பாதுகாப்பு, தற்காலிக மற்றும் நிரந்தர முடத்தன்மை உட்பட பல்வேறு நன்மைகளைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை சுயதொழில் சமூகப் பாதுகாப்புத் திட்டம் (எஸ்.கே.எஸ்.பி.எஸ்.) வழங்குவதாக துணை மனிதவள அமைச்சர் டத்தோ அவாங் ஹாஷிம் கூறினார்.

சுயதொழில் காப்பீடு செய்தவர்களுக்கு தொழில் சார்ந்த நோய்கள் மற்றும் பணியில் இருக்கும் போது ஏற்படும் விபத்துகளிலிருந்து பாதுகாப்பை வழங்குவதை இந்த எஸ்.கே.எஸ் பி.எஸ். திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு சுயதொழில் சமூகப் பாதுகாப்புச் சட்ட விதிகளின் கீழ் பகுதி நேரப் பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்படுவதை இத்திட்டம் உறுதி செய்கிறது என்றார் அவர்.

‘கெலுர்கா மலேசியா’ எனும் கருப்பொருளைக் கொண்ட 2022 வரவு செலவுத் திட்டத்தில்   எஸ்.பி.எஸ்.  இணையான பங்களிப்புத் திட்டத்தின் மூலம்  எஸ்.கே.எஸ்.பி.எஸ். உதவி வழங்குகிறது, இதன் வழி  அரசாங்கம் 80 சதவிகித தொகையை அதாவது  186.20  வெள்ளியை வழங்கும் வேளையில்  சுயத் தொழில் புரிவோர் 20 சதவிகிதம் அல்லது 46.60 வெள்ளியை பங்களிப்பாக வழங்க வேண்டும் என்று அவர் நேற்று வட பிராந்தியத்தைச் சேர்ந்த ஊடக பயிற்சியாளர்களுடனான சொக்சோ நிகழ்ச்சியில் கூறினார்.

இந்த நிகழ்வில் கெடா தகவல், தொடர்பு, பல்லூடகம், உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு  உறுப்பினர் ரோமானி வான் சலின் மற்றும் மாநில சொக்சோ இயக்குநர் முகமது ஹரோன் ஓத்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Pengarang :