ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பாரிசான்  ஜி.எஸ்.டி. மறு அமலாக்கத்திற்கான வழிகளை ஆராய்கிறது

கோலாலம்பூர், மார்ச் 22- ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள் சேவை வரி மற்றும் இதர வரி விதிப்பு மாதிரிகளின் அமலாக்கத்திற்கான பொருத்தமான வழிகளை அரசாங்கம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

நடப்பிலுள்ள விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்.எஸ்.டி.) கடந்த 2015 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி ஆகியவற்றில் உள்ள பலவீனங்கள் உள்ளிட்ட அம்சங்கள் ஆராயப்பட்டு வருவதாக நிதியமைச்சு கூறியது.

நாட்டின் பொருளாதாரம், வாழ்க்கைச் செலவினம், பொருள் விலை மற்றும் நிழல் பொருளாதாரம் (கள்ளச் சந்தை) ஆகிய அம்சங்களையும் அந்த ஆய்வு உள்ளடக்கியுள்ளதாக அது தெரிவித்தது.

நாடாளுமன்றத்தில் வாய்மொழியாக எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதியமைச்சு இவ்வாறு பதிலளித்தது. இந்த பதில் நாடாளுமன்ற அகப்பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை அரசாங்கம் மீண்டும் அமல்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதா என்று கம்பார் உறுப்பினர் சூ கியோங் சியோங் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சு இந்த பதிலை வழங்கியுள்ளது.

புதிய வரி விதிப்பு முறை ஒரு வேளை அமல்படுத்தப்பட்டால் அது எளிதில் நிர்வகிக்கக்கூடிய வகையிலும் வர்த்தக செலவினத்தை அதிகரிக்கும் வகையில் இல்லாமலும் நாட்டின் நிதி நிலையை வலுப்படுத்தக்கூடிய வகையிலும் இருப்பது உறுதி செய்யப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.

நாட்டின் பொருளாதாரம் தற்போது மீட்சி கண்டு வரும் நிலையில் எந்தவொரு வரி விதிப்பும் நடப்பு சூழலை பாதிக்காத வகையில் இருப்பது உறுதி செய்யப்படும் அது உறுதியளித்துள்ளது.


Pengarang :