ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

சுற்றுச் சூழலைப் பாதுகாக்கச் சிலாங்கூரில் “புவி நேரம்“ அனுசரிப்பு

ஷா ஆலம் மார்ச் 22– சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது மற்றும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வது ஆகிய நோக்கங்களில் அடிப்படையில் சிலாங்கூர் அரசு வரும் சனிக்கிழமை “புவி நேர“ அனுசரிப்பு நிகழ்வை நடத்தவுள்ளது.

சனிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை அலுவலகக் கட்டிடங்கள், வணிக மையங்கள் மற்றும் வீடுகளில் மின்சார விளக்குகளை அணைப்பதன் மூலம் இந்த இயக்கத்தில் பங்கேற்கும்படி பொதுமக்களைச் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  ஹீ லோய் சியான் கேட்டுக் கொண்டார்.

அரசாங்கக் கட்டிடங்கள் மற்றும் ஊராட்சி மன்றங்கள் உள்ளிட்ட அரசு சார்பு துறை கட்டிடங்களும் இந்தப்  புவி நேரத்தை அனுசரிக்கும் வகையில் விளக்குகளை அணைக்கும்படி அவர் வலியுறுத்தினார்.

இந்தப் புவி நேர இயக்கத்தில் பங்கேற்கும்படி தனியார் துறையின் பங்கேற்பையும் நாங்கள் வரவேற்கிறோம்.  பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து விளக்குகளையும் அணைக்காமல் அலங்கார விளக்குகள்  அவசியமற்றதாகக்  கருதப்படும் விளக்குகள் மற்றும் மின்சாரச் சாதனங்கள் போன்றவற்றை மட்டுமே அணைத்தால் போதுமானது  என்றார் அவர்.

சம்பந்தப்பட்ட பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகச் சம்பந்தப்பட்ட கட்டிடங்களின்  தேவைக்கேற்பப் பாதுகாப்பு விளக்குகளை மட்டும் எரியவிடும்படி அவர்  இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.

உலகம் எதிர்நோக்கி வரும் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் தொடர்பான விழிப்புணர்வைப் பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வை ஆண்டு தோறும் நடத்தத் தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :