ECONOMY

சிப்பாங் போலீஸ் தலைமையகத் தீச்சம்பவத்திற்குச் சதிச் செயல் காரணமல்ல- ஓ.சி.பி.டி. தகவல்

சிப்பாங், மார்ச் 23- சிப்பாங் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் முதல் மாடியில் நேற்று மாலை ஏற்பட்ட தீச்சம்பவத்திற்குச் சதிநாசம் அல்லது குற்றச் செயல் காரணமல்ல எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மேற்கொண்ட சோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டதாகச் சிப்பாங் மாவட்டப் போலீஸ் தலைவர்  ஏசிபி வான் கமாருள் அஸ்ரான் வான் யூசுப் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உயர் ஆணையர் 11 அஸ்லான் ரஹ்மாட் தலைமையிலான குழுவினர் தீவிபத்து நிகழ்ந்த இடத்தில் நேற்றிரவு 10.00 மணி வரை மேற்கொண்ட சோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

சிப்பாங் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தின் முதல் மாடியிலுள்ள அலுவலகத்தில் நேற்று மாலை 6.00 மணியளவில் தீச்சம்பவம் ஏற்பட்டது. சுமார் நாற்பது நிமிடங்களுக்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் தீயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர்.

குற்றப்புலனாய்வு பிரிவின் நிர்வாக அலுவலகத்தில் தொடங்கிய தீப் பின்னர் அருகிலுள்ள குற்றப்புலனாய்வுத் துறையின் கூட்ட அறை மற்றும் முதன்மை விசாரணை அதிகாரியின் அலுவலகத்திற்கும் பரவியது என்று அவர் சொன்னார்.

இச்சம்பவத்தில் விசாரணை அறிக்கை எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்தத் தீவிபத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அலுவலகம் முழுமையாகச் சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :