ECONOMYNATIONAL

போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு- வெ.45 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

ஈப்போ, மார்ச் 24- பேராக் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த திங்கள் கிழமை அதிரடி சோதனை மேற்கொண்ட மாநில போலீசார் போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்றின் நடவடிக்கைகளை முறிடியடித்ததோடு 45 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருள்களையும் கைப்பற்றினர்.

காலை 11.10 மணி முதல் மாலை 5.30 மணி வரை மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில் அக்கும்பல் உறுப்பினர்கள் என நம்பப்படும் 32 முதல் 37 வயது வரையிலான எட்டு உள்நாட்டினர் கைது செய்யப்பட்டதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ மியோர் ஃபாரிடாலதார்ஷா வாஹிட் கூறினார்.

வீடு மற்றும் வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில் ஷாபு, ஹெரோயின், கெத்தாமின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இந்த போதைப் பொருள்கள் 620,025 போதைப் பித்தர்களின் தேவையை ஈடு செய்யும் போதுமானதாகும் என்று மாநில போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

கடந்தாண்டு மத்தியிலிருந்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் இக்கும்பல் கிழக்கு கரை மாநிலத்திலிருந்து போதைப் பொருளைக் கடத்தி வந்து மாநிலத்தில் உள்ளூர் சந்தையில் விநியோகித்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அக்கும்பலிடமிருந்து ரொக்கம், நகைகள், ஐந்து வாகனங்கள் உள்பட 212,712 வெள்ளி மதிப்புள்ள பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.

கைதான அனைவருக்கும் போதைப் பொருள் பழக்கம் இல்லை என்பது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறிய அவர், எனினும் அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் இதர குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றப்பதிவுகள் உள்ளன என்றார்.

கைதான அனைவரும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


Pengarang :